ஆசிரியர் சு. வெங்கடேசன் அவர்கள் எழுதிய புத்தகம்.
இந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல். இது காகிதத்தில் பதிக்கப்பெற்ற வெறும் எழுத்துகள் கொண்ட தொடர் வரிசைகளின் அணிவகுப்பு அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உணர்வுகள் தாங்கிய வாழ்வியல் பெட்டகம். ஆதிகாலத்தில் கூடி வாழ்ந்துகொண்டிருந்த மனித இனம் மாபெரும் சமூகமாக உருவெடுத்த பிறகு பிரிவுகள் ஏற்பட்டன. தொழிலின் அடிப்படையில் சாதிகள் பிரிக்கப்பட்டன என்று சொல்லப்பட்டு வந்த காலத்தில் களவும் ஒரு தொழிலாகிப் போனதுதான் பரிதாபம். ஒடுக்கப்பட்ட சமுதாயமொன்று களவு செய்வதை தனது தொழிலாக்கிக்கொண்டது. அந்த சமுதாயத்தின் முன்னோர்கள் காட்டிய வழியில் அந்த இனத்தின் வகையறாக்கள் பிரிந்தன. அந்த வகையறாக்களைத்தான் சமூகம், குற்றப் பரம்பரைகள் என அடையாளம் காட்டியது. வடஇந்தியாவில் சுமார் 300 ஆண்டு காலமாக ‘டக்கி’கள் எனப்படும் குற்றப் பரம்பரை மிகப் பெரிய வழிப்பறிக் கொள்ளைக் கூட்டமாக நடமாடி வந்தது. அவர்களது வாழ்வியல் என்பது பிறரை ஏமாற்றி அவர்களது சொத்துக்களை கொள்ளையிடுவது, அந்தப் பணத்தைக் கொண்டு சுகபோகங்களை அ-னுபவிப்பது என்பதே! ஆனால், நூலாசிரியர் சு.வெங்கடேசன் ‘காவல் கோட்டம்’ என்ற இந்த நூலில் குறிப்பிடும் குற்றப் பரம்பரையினர் யாரையும் நம்பவைத்துக் கழுத்தறுத்தது கிடையாது. காவல் தொழில் பார்த்தவர்கள் ஆடுகளை கிடையில் இருந்து திருடும் கொள்ளைக் கூட்டமாக உருவானது பெரும் சோகம். இந்த குற்றப் பரம்பரையின் வரலாற்றில் எத்தனை வீரம்? எத்தனை சோகம்? எத்தனை நெகிழ்ச்சி? இதோ நம் தமிழகத்தில்... மண் மணக்கும் மதுரையில் நிலைகொண்டிருந்த ஒரு சமுதாயத்தின் வரலாறு இந்தக் காவல் கோட்டம். இதன் மூலம் மதுரையின் 600 ஆண்டு கால வரலாற்றைத் தரிசிக்கலாம். தமிழ்ச் சமுதாயத்தில் உழைக்கும் மக்கள் கூட்டம் ஒன்று ஏன் குற்றப் பரம்பரையாக உருவானது? அந்த மக்களின் வாழ்வியல் என்ன? இறுதியாக அந்த மக்கள் அடைந்த இழிப் பெயர் என்ன? கிறிஸ்துவ மிஷனரிகளின் வருகைகள் இந்த மக்களின் வாழ்வியலை எப்படி மாற்றின? ‘உரலு நகராம இருக்க அடிக் கல்லு; கை வலிக்காம இருக்க கத சொல்லு’ என இந்த மக்களின் வாழ்வியலை இவர்களது சொலவடைகள் கொண்டே சொல்லாட்சி புரிந்து சிலிர்க்க வைக்கிறார் சு.வெங்கடேசன். இதற்காக அவர் மேற்கொண்ட கள ஆய்வுகள், வாய்மொழிப் பதிவுகள் என ஒவ்வொன்றுக்கும் உயிர்ப்பு இருக்கிறது. ‘இரவெல்லாம் மழை பெய்ததால் எங்கும் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. பூமியால் நீரைக் குடித்து முடிக்க முடியவில்லை’ என ஆங்காங்கே அணிக்கு அணி சேர்க்கும் வார்த்தைக் குவியல்கள் காவல் கோட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகின்றன. வரலாறுகள் வழிவழியாக வாய்மொழியாக சொல்லப்பட்டு வருபவை மாத்திரமல்ல. எனினும் குற்றப் பரம்பரையின் எஞ்சிய கடைசிக் கட்ட வாரிசுகள் தங்கள் பரம்பரையைப்பற்றி தாங்களே சொல்லும் கதைகள் சுவாரசியம் நிறைந்தவை. வீரமும், தீரமும் இந்த பரம்பரையின் சொத்தாக இருந்துள்ளதை காவல் கோட்டம் பதிவு செய்கிறது. நூல் ஆசிரியர் சு.வெங்கடேசனின் பத்தாண்டு கால உழைப்பு இந்த நூல். அவரது உழைப்பின் மேன்மை மகத்தானது. மறைக்கப்பட்ட வரலாற்றை மகத்தான முறையில் வெளிகொண்டு வந்தமைக்காக தமிழ்கூறும் நல்லுலகம் அவரது பெயரை என்றென்றும் உச்சரிக்கும் என்றால் அது மிகையாகாது. ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் பண்பாடுகள், கலாச்சாரங்கள் இயற்கையை ஒட்டி அமைந்திருந்தன என்பதை காவல் கோட்டத்தைப் படிக்கப் படிக்கத் தெரிந்துகொள்வீர்கள். கொம்பூதி புளியமரமும், நல்ல தண்ணீர்க் கிணறும், வெள்ளாடுகளின் சத்தமும் உங்கள் மனதைவிட்டு அகலாது என்பது திண்ணம். வாருங்கள் வரலாற்றில் பயணிப்போம்!
Source: Vikatan Pirasuram
Comments